Friday, September 15, 2023

குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: கி பி 320 – 551)

  குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: கி பி 320 – 551)

kuptharkal notes


குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: கி பி 320 – 551) இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. குப்தப் பேரரசு  பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன.  குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் எனக் கருதப்படுகிறார். அவர் தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது. நாணயங்களில்முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் இவருடையதே. இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் என தற்போது அழைக்கப்படும் பிரயாகை பகுதியே குப்தர்களின் தாயகம் என ஜெய்ஸ்வால் போன்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பார்சிவா ஆட்சிப் பகுதியான பிரயாகை பகுதியே குப்த வம்சத்தினர் தோற்றம் எனக் கருதுகிறார்கள். சில வரலாற்று ஆய்வாளர்கள் வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகம் என கருதுகிறார்கள்.


முதலாம் சந்திரகுப்தர் (319 – 335)

            முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற, வலிமை மிகுந்த ‘லிச்சாவி’ அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார். இக்குடும்பத்தின் ஆதரவோடு, வட இந்தியச் சிற்றரசுகள் பலவற்றை இவர் வெற்றிகொண்டு, ஒரு பேரரசின் முடியரசராகத் தன்னை முடி சூட்டிக்கொண்டார். சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர். குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரகுப்தர் (335-380)

         முதலாம் சந்திரகுப்தரின் மகனான சமுத்திரகுப்தர் குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் ஆவார். சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ‘ஹரிசேனர்’ இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.

இரண்டாம் சந்திரகுப்தர் (380 – 415)

          இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார். அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார். அவர் சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இவருடைய ஆட்சியின்போது பாகியான் எனும் சீன பௌத்த அறிஞர் இந்தியா வந்தார். மிகச் சிறந்த அறிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் (நவரத்தினங்கள்) இவருடைய அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காளிதாசர் எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர்.

குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர் அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். ஆனால்பன்னிரண்டுஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்கள் குப்தப் பேரரசை தோற்கடித்தனர். மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான பாலாதித்யர் முதலாம் நரசிம்மகுப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார்.

முதலாம் குமாரகுப்தர்  (415 – 455)

          இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பிறகு அவரது மகன் முதலாம் குமாரகுப்தர் ஆட்சிக்கு வந்தார். முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகம், யுனேஸ்கோ அமைப்பால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்ளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிய தில்லி இரும்புத் தூண் குமாரகுப்தன் காலத்தில் நிறுவப்பட்டது.

ஸ்கந்தகுப்தர்

            முதலாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஸ்கந்தகுப்தர் குப்தப் பேரரசின் ஆட்சியாளர்களில் எட்டாவதும் மற்றும் இறுதி பேரரசராகவும் கருதப்படுகிறார். புஷ்யமித்திர சுங்கனை போரில் வென்ற ஸ்கந்தகுப்தர், கி பி 455-இல் நடு ஆசியாவிலிருந்து, குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல்களை நடத்திய வெள்ளை ஹூணர்கள் எனப்படும் ஹெப்பதலைட்டுகளை போரில் விரட்டி அடித்த போதிலும், கி பி 455 தொடங்கி குப்தப் பேரரசின் நிதி மற்றும் பொருளாதாரம் வற்றியது. கி பி 467-இல் ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின் அவரது பங்காளி முறை சகோதரன் புருகுப்தர் 467-இல் குப்தப் பேரரசின் மன்னரானர்.

குப்தப் பேரரசு ஆட்சி அமைப்பு

          குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனும் கோட்பாடு குப்த அரசர்கள் அரசியல், நிர்வாகம், இராணுவம், நீதிவழங்கல் ஆகிய துறைகளில் பெருமளவிலான அதிகாரம் பெற்றுத் திகழ்ந்தனர். குப்த அரசர்களுக்கு அமைச்சர்கள் (மந்திரி) குழுவொன்று நிர்வாகத்தில் உதவி செய்தது. அக்குழு இளவரசர்களையும், உயர் அதிகாரிகளையும், கப்பம் கட்டும் சிற்றரசர்களையும் கொண்டிருந்தது. நாட்டின் அன்றாட நிர்வாகத்தைத் திறம்பட நடத்த, பெருமளவிலான அதிகாரிகள் குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்டனர். உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் ‘தண்ட நாயகர்’ மற்றும் ‘மகாதண்ட நாயகர்’  என அழைக்கப்பட்டனர்.

குப்தப் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனும் பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றை ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர். பிராந்தியங்கள் விஷ்யா எனும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. விஷ்யாபதிகள் எனும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தை மேற்கொண்டனர். கிராம அளவில் கிராமிகா, கிராமதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.

விரிந்து பரந்த குப்தப் பேரரசு, இராணுவ அமைப்பின் முக்கியப் பங்கினை உணர்த்துகிறது. முத்திரைகளிலும் கல்வெட்டுக்களிலும் இராணுவப் பதவிகளின் பெயர்கள் பாலாதிகிரிதா, (காலாட்படையின் தளபதி) மஹாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தூதகா’ எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய வேவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.

சமூகமும் பொருளாதாரமும்

குப்தப் பேரரசு: நிலம் மற்றும் விவசாயிகள்

காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது. சமுத்திரகுப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பலவேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்

1.க்ஷேத்ரா-வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்

2.கிலா- தரிசு நிலங்கள்

3.அப்ரகதா-வனம் அல்லது காட்டு நிலங்கள்

4.வஸ்தி-குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்

5.கபத சரகா-மேய்ச்சல் நிலங்கள்

 வணிகம்

         குப்தர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிகர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ‘சிரேஸ்தி’ மற்றும் ‘சார்த்தவாகா’ என அவர்கள் அழைக்கப்பட்டனர்.

சிரேஸ்தி

          சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.

சார்த்தவாகா

சார்த்தவாகா வணிகர்கள் எருது  பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

நாட்டின் பலபகுதிகளை இணைக்கும் சாலைகளைக் குப்தர்கள் அமைத்தனர். பாடலிபுத்திரம், உஜ்ஜைனி, வாரணாசி, மதுரா ஆகியன முக்கிய வணிக நகரங்களாக இருந்தன. இந்தியாவில் உள்ள மேலைக் கடற்கரைத் துறைமுகங்களும் (கல்யாண், மங்களூர், மலபார் ) கீழைக் கடற்கரைத் துறைமுகமும் (வங்காளத்திலிருந்த தாமிரலிப்தி) வணிகப் பெருக்கத்திற்கு உதவின.

குப்தப் பேரரசு: மதம்

          வேத மதமும் வேதச் சடங்குகளும் புத்துயிர் பெற்று, மீண்டும் நடைமுறைக்கு வந்தன. சமுத்திரகுப்தரும் முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வி) நடத்தினர். குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம். ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்துவந்தது.

கலையும் கட்டடக்கலையும்

         கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோவில்களின் அடுத்த கட்டப் பரிணாம் வளர்ச்சியாகும். கோபுரங்களோடும் விரிவான செதுக்குவேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் இக்கோவில்கள் கட்டப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்தியப் பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.

குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை. சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம். குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை அஜந்தா குகை ஓவியங்களும், குவாலியர் பாக் குகையில் காணப்படும் ஓவியங்களும் ஆகும்.

இலக்கியம்

        பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்தபோதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலகமொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களின் கல்வெட்டுகள், அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன. குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருத இலக்கணமும் வளர்ச்சி பெற்றது. அது பாணினி எழுதிய ‘அஷ்டதியாயி’, பதஞ்சலி எழுதிய மகா பாஷ்யம்’ எனும் நூல்களை அடிப்படையாகக் கொண்டது.

வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா எனும் பௌத்த அறிஞர் ‘சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதினார். காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.


No comments:

Post a Comment