TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.
குரூப் 4 தேர்வில், 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர். 2022ம் ஆண்டு சீருடைப்பணியாளர்கள் எஸ்ஐ தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2022ம் ஆண்டு போலீஸ் தேர்வில் 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு வருகிற 14ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் இத்தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இ-மெயில் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment