TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ‘குட் நியூஸ்’: வந்தாச்சு கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு!
சென்னை : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, க்ரூப்-2A, குரூப்-1 ஆகிய பிரிவுகளில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 10,117-ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
முதல் கட்டமாக குரூப் 4 தொகுதியில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment