Friday, May 5, 2023

சாதிச்சான்றிதழின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க டிஎன்பிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு

tnpsc-has-no-authority-to-validate-community-certificate

 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தொடர்ந்த வழக்கில் சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் டிஎன்பிஎஸ்சிக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1996-97 ஆம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராணி என்பவர் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் கணவர் இறந்த நிலையில், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி எஸ்.சி சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தார்.


தேர்வில் தேர்ச்சியடைந்த நிலையில் பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் எடுத்த சாதிச்சான்றிதழை சமர்ப்பித்திருந்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தந்தை பெயரில் பெற்ற சாதிச்சான்றைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து ஜெயராணி வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அதில், அவர் சமர்ப்பித்த சாதிச்சான்றிதழ் செல்லும் என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதிச்சான்றிதழை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட டிஎன்பிஎஸ்சி அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.


அதனைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி மேல் முறையீடு வழக்கைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் திலகவதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் எஸ்.சி சாதிச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. 

சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய டிஎன்பிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனவே தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி, மேல்முறையீடு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.


தொடர்ந்து, ஜெயராணியின் சாதிச்சான்றிதழை சரிபார்க்கும்படி மாவட்ட குழுவுக்கு, அரசுக் கருவூல கணக்குத் துறை ஆணையர் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் அதன் மீது விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்ட முழு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த குழுவின் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி அளிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment