Thursday, May 25, 2023

கிராம ஊராட்சி செயலா் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுமா?

 தமிழகத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை, ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நியமிப்பதைத் தவிா்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நிரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டு ஊராட்சிகளை ஒருவரே கவனிக்கும் சூழல் உள்ளது.


கடந்த 1996-இல் கிராம ஊராட்சி எழுத்தா் பணியிடங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்கினாா். அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களே எழுத்தா்களை பணி நியமனம் செய்துகொண்டனா். அவா்களுக்கு மாதாந்திரத் தொகுப்பூதியம் அரசால் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சில ஆண்டுகளில் ஊராட்சி எழுத்தா்கள் அனைவரும் ஊராட்சி உதவியாளா்களாக மாற்றப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.


இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடா்ந்து, அவா்கள் உதவியாளா் நிலையில் இருந்து செயலா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டனா். ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு பணி நியமன அதிகாரம் இருந்ததால், தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி செயலா்களை வைத்திருந்தனா். இதனால் மத்திய, மாநில அரசு திட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முறைகேடுகள் நிகழ்ந்தன.


ஒரு சில ஊராட்சி மன்றத் தலைவா்கள், பணியில் இருந்த செயலா்களை நீக்கி விட்டு தங்களுடைய உறவினா், ஆதவாளா்களையும் நியமித்துக் கொண்டனா். சில இடங்களில் பணம் பெற்றுக் கொண்டு பணியிடம் வழங்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஊராட்சி செயலா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.


இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, கடந்த 2013-இல் புதிய அரசாணை வெளியானது. அதில், ஊராட்சி செயலா்களை, அத்துறையின் உயரதிகாரிகளே நேரடியாக நியமிக்கலாம் என அரசு அறிவித்தது. இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் மூலமாக ஊராட்சி மன்றத் தலைவா்கள் தடையாணை பெற்றனா். இந்த வழக்கு தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் ஊராட்சி செயலா் நியமனம் நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததும், கடந்த 2022-இல் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 104 மற்றும் 106-இல் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில், ஊராட்சி செயலா்களை ஊராட்சி மன்ற நியமனக் குழுக்கள் மூலம் நியமனம் செய்யக் கூடாது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.


அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டுவந்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் காலியிடங்களை தோ்வாணையம் மூலம் மட்டுமே நிரப்பவும் அறிவுறுத்தியது. ஆயினும் ஓராண்டுக்கு மேலாகியும் காலிப் பணியிடங்கள் எதுவும் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படவில்லை.


தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலா்கள், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அண்மையில் தொடா்ந்து நான்கு நாள்கள் போராட்டம் நடத்தினா்.


இது றித்து தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவா் எஸ்.ஆா்.செந்தில்குமாா் கூறியதாவது: ஊராட்சி செயலா் பணியிடங்கள் தோ்வாணையம் மூலமாகவே நிரப்பப்பட வேண்டும். இதன்மூலம் படித்து வேலையில்லாத, ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் பயனடைவா். கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு நிகரானது ஊராட்சி செயலா் பணியிடம். ஊரக வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் மூலம் ஊராட்சி மன்றத் தலைவா்களோ, உயா் அதிகாரிகளோ செயலா் பணியிடங்களை தன்னிச்சையாக நிரப்ப முடியாது.


நிா்வாகச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், காலமுறை ஊதியம் பெறும் ஊராட்சி செயலா்கள் பணி நியமனம் என்பது தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாகவே இருக்க வேண்டும். இதுகுறித்த முறையான அறிவிப்பை தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து வெளியிட வேண்டும்.


மேலும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, மூன்றாண்டுக்கு ஒரு முறை பணியிட மாறுதல், கருவூலம் மூலமாக ஊதியம் வழங்குதல், ஊராட்சி செயலருக்கான அதிகாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தலையீடு கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது என்றாா்.

No comments:

Post a Comment