TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Self Study Groups) மூலம் TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு, விண்ணப்பிக்க, DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING FACULTY REGISTRATION FORM என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பப்படிவத்தை வரும் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து விவரங்களுக்கு 044-22501006/22501002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில், கல்வித் தகுதி, போட்டித் தேர்வுகளில் உள்ள முன்அனுபவம், தற்போதைய பணி நிலவரம், எடுக்க விரும்பும் பாடங்கள் ஆகியன விவரங்களை நிரப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முன்னாள் தேர்வர்களுக்கு நல்ல வாய்ப்பு:
முன்னதாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டுதிட்டத்தில், குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
மேலும், குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுத் திட்டம், தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. எனினும், எதிர்வரும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் தயார் செய்து கொண்டு வருபவராக இருந்தால், இந்த பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளத்துடன் நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயார் செய்ய இந்த பணி வழிவகுக்கும்.
No comments:
Post a Comment