Monday, November 14, 2022

தமிழ் வழியில் பயின்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சாதிக்கின்றனரா? தரவுகள் சொல்லும் உண்மை !

 

tamil jobs tnpsc

பள்ளிக்கல்வி, உயர்கல்வியைத் தாய் மொழியில் வழங்குவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய/மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில், கடந்த 2010 முதல் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில்  20% இடஒதுக்கீடு (PSTM) வழங்கப்பட்டு வருகிறது.


இருப்பினும், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கு இந்த 20% இடஒதுக்கீட்டின் கீழ் தகுதியான நபர்கள் கிடைக்காததால் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது.


உதாரணமாக, 2020-21-ஆம் நிதி ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், மாநில அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 16 வகையான பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது. இதில், தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்றோருக்கு மட்டும்  1000க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

ஆனால், இதில் 762 இடங்கள் மட்டுமே நிரப்பட்டப்பட்டது. இதர, இடங்கள் அதே சமூக வகுப்பினரில் உள்ள PSTM- இல்லாத விண்ணப்பதாரர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.


பெரும்பாலும், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தேர்வுகளில் (குரூப் 4 தேர்வு) மட்டுமே 20% இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.


அதே சமயம், பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு போன்றவைகளை கல்வித் தகுதிகளாக கொண்ட தேர்வுகளில் (Assistant Public prosecutor, research assistant, Psychologist, veternary Assistant) தகுதியான PSTM விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தொடக்க கல்வி மாணவர்களில் 43.5% பேரும், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 57.5% பேரும், 10 வகுப்பு வரையிலான உயர்நிலை மாணவர்களில் 61.9% பேரும், 12ம் வகுப்பு வரையிலான மேல் உயர்நிலை மாணவர்களில் 61.7% பேரும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் தான் பயின்று வருகின்றனர். 

இதில், குறிப்பதாக  8,10,12ம் வகுப்புகளில் ஆதிதிராவிடர் மாணவர்களில் 70% க்கும் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 50%க்கும் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் பயின்று வருவதாகவும்  கூறப்படுகிறது.

இதுகுறித்து,  கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,  தமிழ் மொழி பயின்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இடங்கள் நிரப்பப்படாத நிலையே நீடித்து வருகிறது . பட்டப்படிப்பு, தொழிக்கல்வி பட்டயப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்புகளில் தமிழ் மொழியை மேலும்  கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை நிறுவன ரீதியாக தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும்" என்று கூறுகின்றனர். 

No comments:

Post a Comment