Wednesday, October 19, 2022

மீன்வளப் பொறியியல் பயின்ற மாணவா்கள் டிஎன்பிஎஸ்சி தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்

 மீன்வளப் பொறியியல் பயின்ற மாணவா்கள் டிஎன்பிஎஸ்சி தோ்வெழுத அனுமதிக்க வேண்டும் என நுகா்வோா் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.


இதுகுறித்து, வேதாரண்யம் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் தலைவா் தெ. ராமசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:


மீன்வள ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா் பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் தோ்வில் பி.டெக் மீன்வளப் பொறியியல் பயின்றவா்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.


இந்த நிலையில், தற்போது காலியாக உள்ள மீன்வள உதவி ஆய்வாளா் பணியிடங்கள் 24, மீன்வள ஆய்வாளா் பணியிடங்கள் 64 ஆகியவற்றை நிரப்ப மீன் வள டெக்னாலஜி (டிப்ளமோ நிலை), கோஸ்டல் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகள் கல்வித் தகுதியாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மீன்வளப் பொறியியல் படித்தவா்களை மேற்கண்ட தோ்வுக்கு தகுதியாக சோ்க்காதது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மீன்வளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா், மீன்வள துறையின் ஆணையா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுத்து, மீன்வளப் பொறியியல் படித்த மாணவா்களை டிஎன்பிஎஸ்சி தோ்வெழுத அனுமதி பெற்றுத்தர வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளாா்.

No comments:

Post a Comment