அரசுத்துறை பணிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வின் முதல் நிலையிலும், தமிழை கட்டாயமாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப் 2, குரூப் - 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,529 இடங்களுக்கு, புதிய அலுவலர்களை நியமிக்க, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மே, 21ல் நடக்க உள்ள இந்தத் தேர்வுக்கு, பிப்., 23ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; இம்மாதம் 23ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
முதல்நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வு தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு வகையாக நடத்தப்படும்; ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து தேர்வு எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதான தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த தேர்வில், தமிழ் மொழித்தாள் கட்டாயம். இந்நிலையில், முதல்நிலை தகுதி தேர்வு எழுதும் அனைவருக்கும், தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ் வழியில் படித்த பட்டதாரிகள் கூறியதாவது:முதல் நிலை தகுதி தேர்வில், ஆங்கில மொழியை தேர்வு செய்து தேர்ச்சி பெறுவோர், பிரதான தேர்வில் தமிழில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தாலே, தேர்ச்சி பெற்றவர்களாகி விடுவர். ஆங்கில வழியை தேர்வு செய்து, அதிக பட்டதாரிகள் தேர்ச்சி பெற முடியும். ஆனால், முதல்நிலை தகுதி தேர்வில் தமிழ் மொழியை கட்டாயமாக்கினால் மட்டுமே, தமிழ் வழியில் படித்தவர்கள் அதிகம் பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியும்.
தமிழக அரசு துறைகளில், தமிழ் வழியில் படித்தவர்கள் அதிக அளவில் பணியாற்ற முடியும். எனவே, முதல்நிலை தகுதி தேர்விலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment