இந்தியாவின் ஆகக் கிறந்த அம்சமாக உலக நாடுகள் வியந்து பாராட்டுவது - நமது ஜனநாயக அமைப்பு. குறிப்பாக, நமது தேர்தல்கள். அரசமைப்பு சட்டத்தின் பாகம் XV - இதற்காகவே இருக்கிறது.
நாடாளுமன்றத்துக்கான எல்லாத் தேர்தல்களும், ஒவ்வொரு மாநிலத்துக்குமான சட்டமன்றத் தேர்தல்களும், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்களுக்கான வாக்களர் பட்டியல் தயாரிப்பதும் தேர்தல்களை நடத்துவதும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. பி.324.
தெரிந்துகொள்ளவேண்டிய தேர்தல் சிறப்பு விதிகள் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் பிற ஆணையர்கள் இருப்பார்கள்; இவர்களை, குடியரசுத் தலைவர் நியமிப்பார். இவ்வாறு பிற ஆணையர்கள் நியமிக்கப் படுகிறபோது, முதன்மை ஆணையர், தேர்தல் ஆணையத்துக்குத் தலைவராக இருப்பார். ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் ஆணையத்தைக் கலந்தாலோசித்து, மண்டல ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே வாக்களர் பட்டியல் இருக்கும். மதம், இனம், சாதி, பாலினம், இன்ன காரணங்களுக்காக, யாருக்கும், வாக்காளர் பட்டியலில் இடம், மறுக்கப்பட மாட்டாது. இந்தியக் குடிமகனாக இருந்து, 18 வயதுக்குக் குறைவில்லாத, அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. பி. 326. வயது வரம்பு ஆரம்பத்தில் 21ஆக இருந்தது. 1989 மார்க் 28 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற, 61வது திருத்தம் மூலம், இந்த வாக்களிக்கும் வயது, 18ஆகக் குறைக்கப்பட்டது. தேர்தலுக்கு எதிரான மனு மீதன்றி, தேர்தல் தொடர்பான விவகாரங்கள், நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டவை ஆகும். பிரிவு 324 முதல் 329 வரை ஆறு பிரிவுகள் மட்டுமே கொண்டது இந்த பாகம்.
இதை அடுத்து, பாகம் XVI, சிறப்பு விதிகள் (Special Provisions) பற்றியது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்காக, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் சில தொகுதிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்கிறது - பிரிவு 330. மக்களவையில் ஆங்கிலோ - இந்தியப் பிரிவினருக்குப் போதிய பிரதி நிதித்துவம் இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், இரண்டுக்கு மேற்படாத உறுபினர்களை நியமிக்கலாம். (பி. 331) இந்த சிறப்பு நியமனம், அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 70 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். (95வது திருத்தம் / 2009)
எஸ்.சி பிரிவினரின் நலன்களைப் பாதுகாக்க, தேசிய ஆணையம் (National Commission ofr Scheduled Castes) அமைக்க வழி செய்கிறது பி.338. இந்த ஆணையத்தில், ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவார்கள். இந்த ஆணையம் எவ்விதம் செயல்பட வேண்டும் என்கிற நடைமுறைகளை, ஆணையமே தீர்மானிக்கும்.
ஆணையத்தின் அதிகாரங்கள்: பிரிவு.338 (5)
a) எஸ்.சி. பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்க,
புலன் விசாரணை செய்தல்
b) மறுக்கப்பட்ட உரிமைகள் பற்றிய தனி வழக்குகளை விசாரித்தல்
c) மத்தியிலும் மாநிலங்களிலும், எஸ்.சி. பிரிவினரின் மேம்பாடு குறித்து மதிப்பிடுதல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அறிவுறுத்தல்;
d) எஸ்.சி. பிரிவினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, குடியரசுத் தலைவருக்கு, ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்;
e) தனது அறிக்கையின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.
இந்த ஆண்டறிக்கை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப் படும். ஏதேனும் ஒரு புகாரின் மீது விசாரணை மேற்கொள்கிற ஆணையம், ஒரு 'சிவில் கோர்ட்' அதாவது குடிமை நீதிமன்றம் போன்றே அத்தனை அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும். இதே போன்று, பட்டியல் மரபினருக்கும் தனியே தேசிய ஆணையம் இருக்கும். (National Commission for Scheduled Tribes). ஒரு தலைவர், துணைத்தலைவர், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையம், எஸ்.சி. தேசிய ஆணையத்தைப் போன்றே அனைத்து அதிகாரங்களும் கொண்டு இருக்கும்.
குடியரசுத் தலைவர், (மாநிலங்களில் ஆளுநர்) எவ்வெப் பிரிவுகள் எல்லாம், எஸ்.சி., எஸ்.டி.யாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று, பொது அறிவிக்கை மூலம் தெரிவிப்பார். மேற்சொன்ன குறிப்புகளை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ளவும். இத்துடன், தற்போது இந்த ஆணையத்தின் தலைவர் யார் என்கிற விவரத்தையும் அறிந்து கொண்டால், மிகவும் நல்லது. போட்டித் தேர்வுக்கு மிக முக்கியமான பகுதி இது மறந்து விட வேண்டாம்.
No comments:
Post a Comment