இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது.
இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
எடுத்துக்காட்டு
சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது;
கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று;
சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன.
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.
ஆசிரியர் வரலாறு :
- இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர்.
- இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார். ஆதலால் இவரின் சமயம் வைதீகமாகும்.
- இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
- இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.
நூற்குறிப்பு :
இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது.
இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.
வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.
No comments:
Post a Comment