குரூப் - 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தேர்வுகள், தனித்தனியாக நடத்தப்பட்டுவந்தன. தற்போது இந்த இரு தேர்வுகளும் இணைக்கப்பட்டதால், கிராம நிர்வாகம் பற்றிய பகுதி படிக்கத் தேவையில்லை. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் 13 முதல் 15 லட்சம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஹெச்.டி படித்தவர்கள் வரை பல்வேறு கலை, அறிவியல், தொழிற்படிப்பு படித்தவர்கள் அதிக அளவில் விண்ணப்பிப்பதால், போட்டி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் மிக அதிகமாகப் பெறவேண்டும்.
இந்தத் தேர்வுக்குத் தயாராவது குறித்தும், எளிதில் வெற்றிபெறுவதற்கான வழிகள் குறித்தும், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்றவரும், தற்போது மத்திய அரசின் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று முசோரியில் பயிற்சி பெற்றுவருபவருமான மணிகண்டன் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டுகிறார்.
எந்தப் போட்டித்தேர்வுக்குத் தயார்செய்தாலும் அதற்கான பாடத்திட்டம், முந்திய கேள்வித்தாள்கள், புத்தகங்கள் இவற்றில் தெளிவாக இருக்க வேண்டும். TNPSC தேர்வின் அறிவிப்பிலேயே பாடத்திட்டம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொதுத்தமிழ் / ஆங்கிலம் - 100 கேள்விகள், பொது அறிவு - 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படுகிறது.
பெரும்பாலான கேள்விகள் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுவதால், பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிப் பாடத்திட்டப் புத்தகங்களே முதன்மையான புத்தகங்களாகும்.
எந்த ஒரு போட்டித்தேர்வுக்கும், முந்தைய கேள்வித்தாள்களைப் போன்று வேறு யாரும் வழிகாட்ட முடியாது. 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், எந்தெந்தப் பாடப் பிரிவுகளிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து, இந்த ஆண்டு தேர்வுக்குத் தங்களின் தேர்வுத் தயாரிப்பு முறை நிர்ணயிக்கலாம்.
கடந்த தேர்வுகளில் பாடவாரியான கேள்விகள்
2014
2016
பொதுத்தமிழ் / ஆங்கிலம்
100
100
கணிதம்
25
25
வரலாறு
16
16
புவியியல்
8
6
இந்திய அரசியலமைப்பு
3
8
பொருளாதாரம்
6
9
இயற்பியல்
4
4
வேதியியல்
3
3
உயிரியல் - தாவரவியல்
3
2
உயிரியல் - விலங்கியல்
6
6
நடப்பு நிகழ்வுகள்
10
18
அரசின் திட்டங்கள்
6
3
புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. பெரும்பாலான கேள்விகள் (95 சதவிகிதத்துக்குமேல்) பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை அதிகம் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த ஆண்டு வினாத்தாள்களைக்கொண்ட வினா வங்கியைக்கொண்டு, உங்களது தயாரிப்பை அவ்வப்போது சரியான வழியில் உள்ளதா எனச் சோதித்துக்கொள்ளுங்கள்.
தேர்வுத் தயாரிப்பில் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள்:
1. மொழிப்பாடத்துக்கு முக்கியத்துவம்: தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் / ஆங்கிலம் பாடத்திலிருந்து கேட்கப்படுவதால், உங்கள் தயாரிப்பில் பெரும்பாலான நேரத்தை மொழிக்குச் செலவிடுதல் சிறப்பு. பொதுவாக, மாணவர்கள் மொழிப்பாடத்தை எளிமையாகக் கருதி, அதிக சிரமம் எடுப்பதில்லை. ஆனால், மொழிப்பாடமே வெற்றியை நிர்ணயிக்கும் பகுதி. 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ்ப் புத்தகங்களை / ஆங்கிலப் புத்தகங்களை நன்கு படிக்கவேண்டும். வெற்றியாளர்கள், மொழிப்பாடத்தில் முழுமையான மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
2.பாடங்களை வரிசைப்படுத்துங்கள்: ஏற்கெனவே பாடவாரியாக எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதைக் கொடுத்துள்ளோம். அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படும் பாடம் உங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டும்.
3. சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்: பல்வேறு பாடங்களும், அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளும் உங்களுக்குத் தெரியும். ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் நீங்கள் எந்த அளவுக்கு அறிந்துள்ளீர்கள் என எழுதுங்கள். அதிக மதிப்பெண் தரும் முக்கியமான பாடத்தில் குறைவாகப் படித்திருந்தால், உடனடியாக அந்தப் பாடத்தைப் படியுங்கள். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் உங்களைப் பரிசோதனை செய்து, உங்கள் தயாரிப்பைச் சரியான வழியில் செலுத்துங்கள்.
4. திரும்பத் திரும்பப் படியுங்கள்: போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, `படித்தால் மறந்துவிடுகிறது. அதற்கு என்ன செய்வது' என்பதுதான். மறந்தால் மட்டுமே அவன் மனிதன். இல்லையெனில், மெஷின். ஒரு முறை படித்தால் மறக்கும். ஐந்து முறை படித்தால், பத்து முறை படித்தால் நிச்சயம் மறக்காது.
5. படிப்பை, தேர்வோடு தொடருங்கள்: நீங்கள் ஒரு பாடத்தைப் படித்தால் அந்தப் பாடம்சார்ந்து முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து, உங்களது தயாரிப்பைச் சோதித்துக்கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்பு, அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு தயாரிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள். தொடர்ச்சியான தயாரிப்பே வெற்றிக்கு வழிவகுக்கும்.
6. கணிதத்துக்கு முக்கியத்துவம்: பொதுஅறிவுப் பகுதியில் உள்ள கேள்விகளில் 25/100 கணிதப் பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பகுதியைக் கடினமாகக் கருதுவதால், கணிதப் பகுதியில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் வெற்றிக்கு வழிவகுக்கும். பள்ளிப் புத்தகங்களும், பழைய கேள்வித்தாள்களுமே கணிதப் பாடத் தயாரிப்புக்கு அடிப்படை.
7. கால மேலாண்மை: இந்த மூன்று மாதம் உங்கள் வாழ்வை முழுமையாக மாற்றும் காலம். ஒவ்வொரு நாளும் வாரமும் எவ்வளவு மதிப்பெண்ணுக்குத் தயார்செய்துள்ளீர் என்பதைக் கணக்கிடுங்கள். கடினமாக உழையுங்கள். இந்த நாள்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை.
8. நடப்பு நிகழ்வுகள்: பெரும்பாலான மாணவர்கள் மனதில் எழும் கேள்வி, `நடப்பு நிகழ்வுகளை எவ்வாறு தயாரிப்பது, எந்த மாதத்திலிருந்து படிப்பது' என்பதுதான். TNPSC தேர்வில் பெரும்பாலான நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் தேர்வுக்கு முந்திய மாதத்திலிருந்து அதிகபட்சம் ஒரு வருட காலத்துக்குப் படிக்க வேண்டும். அதாவது பிப்ரவரி 2018 நடைபெறும் தேர்வுக்கு ஜனவரி 2018 முதல் ஜனவரி 2017 வரை பின்சென்று படிக்க வேண்டும்.
தினமும் செய்தித்தாள்களையும், சந்தையில் காணப்படும் நடப்பு நிகழ்வு சார்ந்த தொகுப்புப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவும். நடப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முக்கிய தினங்கள், விளையாட்டுச் சார்ந்த கேள்விகள், பல்துறை சாதனைகள் இந்த ஓராண்டு பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. விகடன் பொதுஅறிவுப் புத்தகங்களைப் படியுங்கள். TNPSC தேர்வுகளுக்காக டாக்டர் சங்கர சரவணன் தொகுத்த பொதுத்தமிழ், பொதுஅறிவுப் புத்தகங்களைப் படிக்கலாம்.
9. நிறைய தேர்வு எழுதுங்கள்: TNPSC தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கலாம். எனினும், நிறைய மாதிரி தேர்வை நீங்கள் எழுதும்போது, தவறான விடையை நீக்கி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பெறுவீர்கள். நான்கில் ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, தவறான விடையை நீக்கும் முறை (Elimination Method) மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க உதவும்.
10. தேர்வை எதிர்கொள்ளும் முறை: கேள்விகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். எளிமையானவை, கடினமானவை, மிதமான கடினத்தன்மைகொண்டவை. எளிமையான வினாக்கள் பார்த்தவுடனேயே பதில் கிடைத்துவிடும். கடினமானவை என்பது நமக்குச் சரியாகத் தெரியாத பகுதி. இந்தக் கேள்விகளைக் கடைசியாக எதிர்கொள்வது நல்லது. மிதமான கேள்விகளில் ஓரிரு விடைகளை நாம் தவறு என நீக்கிவிட்டு மீதமுள்ள ஓரிரு விடைகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும். அதிக மாதிரி தேர்வுகளில் நம்மைத் தயார்செய்யும்போது இந்தத் தடுமாற்றங்களைத் தவிர்க்கலாம்.
கேள்வியை முழுமையாகப் படித்து பதிலளிக்க வேண்டும். சில முக்கிய வார்த்தைகளைப் பென்சில்கொண்டு அடிக்கோடிட்டு, பிறகு விடையளிக்கலாம். நெகட்டிவ் மதிப்பெண் இல்லையென்பதால், அனைத்துக் கேள்விகளுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
11. கேள்விகள் கடினமாக இருக்கும் என எதிர்பாருங்கள்: ஆண்டுக்கு ஆண்டு, அரசுத் தேர்வுகளை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், தேர்வும் கடினமாக்கப்படுகிறது. சில நேரங்களில் எதிர்பாராத பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படலாம். தேர்வு, கடினமாகவே இருக்கும் என எதிர்பாருங்கள். தேர்வு எளிமையாக அமையும். இல்லையெனில், மாறுதல்கள் கடினமான நிலையை உருவாக்கக்கூடும்.
12. வெற்றியைக் கைவசமாக்குங்கள்: உலகில் சாதிக்க இயலாத காரியங்கள் எதுவுமில்லை. சரியாகத் திட்டமிட்டுப் படித்தால் எந்தத் தேர்வும் எளிமையானதுதான். போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை தொடர்ச்சியான, நீடித்த (Consistent) தயாரிப்பே வெற்றிக்கு வழிவகுக்கும். தற்போது நவீன தகவல் தொழில்நுட்பத்தையும் உங்களது தேர்வுமுறைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment