Saturday, June 6, 2015

TNPSC மற்றும் TET தேர்வுகளில் வெற்றி பெற [Exam Success Tips and Formula ]

படித்த முடித்தவுடன் ஒரு நல்ல வேலை கிடைக்காதா என ஏங்கும் இளைஞர்கள் ஏராளம். தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளை படித்து முடித்துவிட்டு, போட்டித் தேர்வுகள் எழுதியும் எப்படியும் அரசு வேலை வாங்கி விடலாம் என ஆசை கொண்டிருப்பவர்கள் அதிகம்.

வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் தெரிந்திருக்க வேண்டாமா? பொதுவாக  அரசு வேலைக்காக முயற்சி செய்யும் இளைஞர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தாலே வேலை வாங்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டிருக்கின்றனர்.

இதனால் போட்டித் தேர்வுக்கு தேவையான அறிவை பெறாமல் இருந்துவிடுகின்றனர். தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி , டெட் போன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பித்து விட்டு, தேர்வு எழுதினாலே போதும்.. ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கை இவர்களிடம் இருப்பதே தோல்விக்கு முக்கிய காரணம்.

இதனால்தான் தேர்வு எழுதும் அனைவருமே தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. TNPSC மற்றும் TET தேர்வில் தோல்விக்கான காரணங்களை பார்ப்போம்.

1. பயிற்சி மையங்கள் செல்வதால் வெற்றி  கிடைத்துவிடுமா?

தற்காலத்தில் TNPSC, TET போன்ற போட்டி மற்றும் தகுதி தேர்வுகளுக்கு பயற்சி கொடுக்கும் நிறுவனங்கள் புற்றீசல்களாக பெருகி போய்விட்டன. குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் போதும் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெற்று வேலை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது பயிற்சி நிறுவனங்கள்.

ஆனால் உண்மை என்ன? போட்டி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி மையங்கள் ஒரு வியாபார நோக்கோடு செயல்படுகின்றன என்பதுதான் நிதர்சனம். கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம், அரசு வேலை கனவோடு இருக்கும் இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறது இப்பயிற்சி மையங்கள்.

குறிப்பிட்ட பயிற்சி மையங்கள் முழு மூச்சுடன் மாணவர்களுக்கு பயற்சி கொடுத்தாலும், 99% நிறுவனங்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன.

உண்மையில் பயிற்சி மையங்கள் வெற்றி பெற வைக்கின்றனவா? 

கட்டாயம் இல்லை.. ஒவ்வொருவரும் படித்துணர்ந்து புரிந்துகொண்டால் மட்டுமே போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியும். பயிற்சி நிறுவனங்கள் என்பது ஒரு உந்து சக்தியாக, ஊன்று கோலாக இருக்குமே ஒழிய கடைசி வரைக்கும் கரைக்கு கொண்டு செல்லும் ஓடங்கள் அல்ல ... அவைகள் துடுப்பு போன்றவை. அதை வைத்து படகை கரைக்கு செலுத்த நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும்.

தன்னம்பிக்கையே பலம். 

மனிதர்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் அவர்கள் நினைக்கும் எந்த ஒரு துறையில் சாதிக்கலாம். போட்டித் தேர்வுகள் மட்டுமல்ல.. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதில் வெற்றிப் பெற அதைப் பற்றிய அறிவும், அந்த அறிவைக்கொண்டு வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற மன உறுதியும், கிஞ்சித்தும் குறையாத தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.

போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டோம். இனி தேர்வை எழுதினால் போதும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. தேர்வு பற்றிய அறிவு வேண்டும். எந்தெந்த பாடங்களிலிருந்து, எத்தனை வகையான வினாக்கள் கேட்கிறார்கள், எந்தெந்த முறையில் வினாக்கள் கேட்கப்படுகின்றன, என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பயிற்சி மையங்களின் பலம்; 

பயிற்சி மையங்கள் செல்வது தவறில்லை. ஆனால் நல்லதொரு பயிற்சி மையமாக தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். பணத்திற்காக அதிக மாணாக்கர்களை சேர்த்து அரைகுறையாக பாடம் சொல்லி, தேர்வு நடத்தும் தேர்வு மையங்களுக்கு செல்வதால் பயனொன்றும் இல்லை. ஒரு மாணவரின் பலம், பலவீனம் அறிந்து, அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்க கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும்.

சரியான முறையில் பாடங்களை நடத்தி, அவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ள செய்த பிறகு தேர்வு நடத்தும் தேர்வு மையமாக இருக்க வேண்டும். வருடத்திற்கு வருடம் அப்டேட் செய்யப்பட்ட மெட்டீரியல்களை வழங்க வேண்டும்.

பத்து வருடத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்ட மெட்டீரியல்களை அப்படி அச்சு அசலாக ஜெராக்ஸ் எடுத்து பாடங்கள் நடத்தும் பயற்சி மையங்கள் தேர்வில் வெற்றியைத் தேடி தர முடியாது.

ஆனால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு படிக்க நினைத்தவர்களில் 100க்கு 99.9 சதவிகிதத்தினர் உண்மையில் புத்தகங்களை புரட்டி கூட பார்ப்பதில்லை. தேர்வு நெருங்க நெருங்க,, ஒரு சில நாட்களில் உட்கார்ந்து படிப்பார்கள். ஆனால் அதுபோன்ற பழக்கம் ஒருபோதும் தேர்வின் வெற்றிக்கு உதவாது.

தேர்வு மையங்களின் பலமே ஒரு தேர்வரை பயிற்சி மையத்திற்கு வரவழைப்பதுதான். உண்மையான தேவை உணர்வோடு உள்ள மாணவர்கள் பயிற்சி மையங்கள் வழங்கும் பயிற்சியோடு, சுய முயற்சியையும் இணைத்து வெற்றிக்கான அதி தீவிர முயற்சியை செயல்படுத்துகின்றனர்.

ஒரு சில பயிற்சி மையங்கள் , பயற்சிக்கு சேருபவர்களின் தன்னம்பிக்கை , அறிவு, விடா முயற்சியை உணர்ந்து அவர்களை ஊக்குவிக்கின்றன. வகுப்பில் தேர்வு எழுத வைத்தல், அன்றாடம் தேர்வுக்கு படிக்க வைத்தல் போன்ற பல முயற்சிகளை எடுக்க வைக்கின்றன.

உண்மையில் சொல்வதெனில் வீட்டில் சோம்பேறியாக படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களை பயிற்சி மையத்திற்கு வரவழைத்து, அவர்களையும் படிக்க வைக்க முயற்சிப்பதே பயிற்சி மையங்களின் பலம் எனலாம்.

மெட்டீரியல்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா?

போட்டித் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் வழங்கப்படும் "ஸ்ட்டி மெட்டீரியல்கள்" எனப்படும் வினா - விடை குறிப்பேடுகள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா எனில் நிச்சயமா இல்லை என்று சொல்லலாம்.

மெட்டீரியல்கள் வைத்திருக்கும் அனைவருமே போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. அரசு பாட புத்தகங்களை மட்டுமே படித்து தேர்வில் வெற்றி பெற்றவர்களும் உண்டு.

அது ஒரு கிரியா ஊக்கி போன்றது. அவற்றை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்றால், ஒரு பாடத்திட்டத்தை முழுமையாக நீங்கள் பாட புத்தகங்களில் படித்த முடித்த பிறகு, பயன்படுத்த கூடியதுதான் மெட்டீரியல்கள். முதலில் மூலக்கதை என்னவென்று தெரிந்த பிறகுதான், ஒவ்வொரு காட்சியாக எடுத்து கோர்த்து, திரைப்படமாக மாற்ற முடியும்.

அதுபோலதான் போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராகும் விதமும் இருக்க வேண்டும். நீங்கள் எந்த தேர்வுக்கு தயாராகிறீர்கள். அந்த போட்டித் தேர்வுக்கு என்னென்ன பாடப் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.  எந்த கல்வித் தகுதி தரத்திற்கு கேள்விகள் அமையும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக TNPSC IV குரூப் தேர்வு எனில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள "சமச்சீர் கல்வி" பாட புத்தகங்களை படித்தாலே போதுமானது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துவிதமான பாடங்களையும் ஆய்ந்தறிந்து படிக்க வேண்டும். பாடங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கான விடைகளை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் கட்டம் கட்டி சுட்டி காட்டப்பட்டுள்ள பகுதிகளையும், தடிமன்னா எழுத்துகளில் குறிப்பிட்டப்பட்டுள்ள வார்த்தைகளையும் ஊன்றி கவனித்து படிக்க வேண்டும்.

ஒரு பாடத்தை முழுமையாக படித்து, அதில் எப்படியெப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும் என படிக்கும்போது சிந்தித்தறிந்து படிக்க வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் தவிர்த்து விடாமல் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். இதுதான் முக்கியம்.. இது முக்கியமில்லை என பாகுபடுத்தி படிக்க கூடாது.

விரைவில் போட்டித் தேர்வில் வெற்ற பெற வேண்டுமானால் கண்டிப்பாக ஓராண்டு முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் அவசியம். ஆய்ந்தறிந்து படித்தால் மீண்டும் மீண்டும் அந்தந்த பாடங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. புரிந்துணர்வு மிக மிக முக்கியம். பாடத்தில் உள்ள வார்த்தைகளை புரிந்து கொண்டு, படித்தால் அது எதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது, எதை குறிப்பிடுகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.


சங்கிலித் தொடர்பு கற்றல்

ஏன்? எப்படி? எதற்காக? யார்? யாருடன்? யாருக்காக? எப்போது? எங்கிருந்து, எவையெல்லாம்? இதுபோன்ற  சங்கிலித் தொடர் கேள்விகளை கேட்பதன் மூலம் மிக எளிதாக பாடத்தை புரிந்துகொள்வதோடு  நினைவில் நிறுத்துவதற்கு எளிதாக இருக்கும்.

உதாரணமாக அன்னை இந்திரா காந்தியைப் பற்றி படித்தால், யார் அவர்? அவரின் பெற்றோர் யார்? அவர் என்ன பதவி வகித்தார்? எத்தனை ஆண்டுகள் வகித்தார்.. ஆட்சியில் இருக்கும்போது என்னென்ன திட்டங்களை வகுத்தார்? எங்கு படித்தார்? எந்த ஆண்டில் படித்தார்? யாரை திருமணம் செய்தார்? என்னென்ன சாதனைகள் செய்தார்? அவரின் தனிப்பட்ட குணாதியசங்கள் என்ன? அவரின் வாரிசுகள் யார்? அவர்கள் என்ன செய்தார்கள்? இப்படி ஒவ்வொவரைப் பற்றியும் கேள்விகள் கேட்டு, அதன் மூலம் அறிவை பெருக்கி கொள்ள முடியும்.

கேள்விகள் கேட்டு படிப்பவர்கள் வெகு விரைவில் போட்டித் தேர்வுக்கு தகுதியாகி தயாராகிவிடுவார்கள்.

ஒரு கேள்விக்கு உள்ளாகும் பொருள் அல்லது நபரின் சங்கிலித் தொடராக ஆயிரமாயிரம் கேள்விகள் எழுப்பலாம். அந்த கேள்வுகளுக்கு எல்லாம் விடையகளை தெரிந்து வைத்துக்கொண்டால் சாதாரண TNPSC IV குரூப் மட்டுமல்ல... IAS, IPS போன்ற உயர்தர முதன்மை தேர்வுகளுக்கு மிக மிக எளிதாக தயாராகிவிடலாம்.

பயிற்சி மையத்திற்கு சென்றும், நன்றாக படித்தும் தோல்வி ஏற்படுவது எதனால்? 

முதற்காரணம் தன்னம்பிக்கை இன்மை, அடுத்த காரணம் நமக்குதான் எல்லாமே தெரியுமே என்ற அதீத நம்பிக்கை, அதற்கு அடுத்த காரணம் பொழுது போக்கு சமாசாரங்கள், அதற்கு அடுத்து சொல்வதென்றால் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை...அதற்கு அடுத்த காரணம் ஒழுக்கமின்மை. நன்றாக படிக்கும் திறமை இருந்தும், தேவையில்லாத செயல்களில் கவனத்தை செலுத்துதல்,  அதற்கடுத்து மிக முக்கிய காரணம் பதட்டம்.

சாதாரணமானவர்கள் முதல், நன்றாக பயிற்சி பெற்று, தேர்வுக்கு தாயாராணவர்கள் முதல் அனைவரையும் பாதிக்கும் விடயம் இது.

தேர்வில் வெற்றி பெற மன அமைதி

மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், போட்டித்தேர்வில் பாதி வெற்றிபெற்றுவிடலாம். நன்றாக படித்து, தேர்வில் எதிர்பார்த்த அனைத்து கேள்விகளுமே கேட்கப்பட்டு இருந்தாலும், பதட்டத்தில் ஒரு விடையை மாற்றி போட்டால் கூட, விடைத்தாள் முழுவதுமே தவறான விடைகளாக மாறிவிடும்.

ஒவ்வொரு கேள்வியையும் நன்றாக படித்து, அந்த கேள்விக்குரிய கட்டத்தில்தான் (வட்டத்தில்) பேனாவால் மையை தீட்டுகிறோமா என்பதை உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.

இப்படி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமைக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

TNPSC மற்றும் TET தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? 

நல்லதொரு புரிந்துணர்வுடன் அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகளை அனைத்தையும் அறிந்த ஒருவன் நிச்சயமாக TNPSC போட்டித்தேர்வு, TET தகுதி தேர்வு ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.

வெற்றியை பெற சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். விளையாட்டு, சினிமா, போன்ற பொழுது போக்கு அம்சங்களை குறிப்பிட்ட நாள்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். போட்டித் தேர்வுக்கு தயாராவதில்தான் எண்ணங்கள் இருக்க வேண்டும். தம்மை போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறவர்களிடம் தொடர்பு வைத்திருக்க வேண்டும். கலந்துரையாடல் மிக மிக அவசியம். குழுவாய் விவாதித்து, இணைந்து படிப்பதால் அதிக நன்மைகளை பெற முடியும். ஒருவருக்கு தெரியாத ஒரு விடயத்தை மற்றவர்களிடம் உரையாடுவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். குழு உணர்வுடன் இணைந்து கற்றலை மேற்கொள்பவர்களில் மிக விரைவில், மிக எளிதாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

தற்பொழுது பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் குழுவாக இணைந்து படித்தவர்கள்தான் என்பதை சமீப கால ஆய்வு உணர்த்துகிறது. குறிப்பாக தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கு குழுவாக இணைந்து படித்தவர்கள் பெரும்பாலானோர் அரசு வேலைகளில் உள்ளனர்.

உண்மையான அர்பணிப்புடன், கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் படிப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

கட்டுரை ஆசிரியர்: 
தங்கம்பழனி.
www.thangampalani.blogspot.com

Tags: tnpsc tips, Exam success tips, TET, TNPSC Preparation tips.

1 comment: